இலங்கையின் புதிய பிரதமர் யார்? நாளை நியமிக்கிறார் அதிபர் அனுரகுமார திசநாயக்க!

இலங்கையின் புதிய பிரதமர் யார்? நாளை நியமிக்கிறார் அதிபர்

 அனுரகுமார திசநாயக்க!  


கொழும்பு: இலங்கையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 159 இடங்களைக் கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்ற நிலையில், புதிய பிரதமர் யார் என்பதை நாளை அறிவிக்க உள்ளார் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க. கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்றார். புதிய பிரதமராக ஹரிணி அமரசூர்யாவை நியமித்தார். அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அவரது தேசிய மக்கள் சக்திக்கு வெறும் மூன்று இடங்களே இருந்தன. அந்த நிலையில், எந்தச் சட்டத்தையும் நிறைவேற்றும் நிலையில் தேசிய மக்கள் சக்தி இருக்கவில்லை. அவருக்கு ஆதரவு வழங்கி, பெரும்பான்மையை தரக்கூடிய நிலையிலும் எந்தக் கட்சியும் இருக்கவில்லை. எனவே, அதிபராக பதவியேற்ற அடுத்த நாளே நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த வழிசெய்தார் அனுரகுமார திசநாயக்க. அதிபர் அனுர குமார திசநாயக்க அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி, நிச்சயமாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுவிடும் நோக்கத்துடன் தேர்தல் களத்தில் இறங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் திசநாயக்கவின் என்பிபி கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. 





இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே, அதிக இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அனுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி. 3ல் 2 பங்கு இடங்களுக்கும் மேல் அக்கட்சி வென்றுள்ளது. எண்ணப்பட்ட மொத்த வாக்குகளில் 61.56 சதவீதம் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் 2010 தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்சி 60.33 சதவீத வாக்குகளைப் பெற்றதே அதிகமானதாக இருந்தது.  விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ், மூன்றில் இரண்டு பங்கு அறுதிப் பெரும்பான்மையைப் பெற்ற முதல் கட்சி என்ற பெருமையைப் பெற்றது தேசிய மக்கள் சக்தி. இதன் மூலம் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது தேசிய மக்கள் சக்தி. நாளை இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை அதிபர் அனுர குமார திசநாயக்க நியமிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் மெஜாரிட்டியை நோக்கி தேசிய மக்கள் சக்தி.. இலங்கை தேர்தலில் அசத்திய அனுர குமார திசநாயக்க! இதுதொடர்பாக என்பிபி கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் டில்வின் சில்வா கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "இலங்கையின் புதிய பிரதமர், புதிய அமைச்சரவையை அதிபர் அனுர குமார திசநாயக்க நவம்பர் 18 ஆம் தேதி நியமிப்பார். புதிய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்களின் எண்ணிக்கை 25-க்குள் இருக்கும். இணை அமைச்சர்களின் எண்ணிக்கை 40-க்குள் இருக்கும். மக்களின் வரிப்பணத்தை சிக்கனமாக செலவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே அமைச்சர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். மிக முக்கிய துறைகளில் மட்டும் கூடுதலாக இணை அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்குவதில் அறிவியல் பூர்வமான முடிவுகள் எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார். இலங்கையின் 10-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் வரும் 21 ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் நாளில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய மக்கள் சக்தி, அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதால், நிர்வாக ரீதியான முக்கிய நடவடிக்கைகள் செயல்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial