டெல்லியின் மின்தேவை: வரலாறு காணாத உச்சம்!
தேசிய தலைநகரில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக வெப்ப நிலைக்கு மத்தியில், டெல்லியின் மின் தேவை ஏற்றம் கண்டுவருகிறது. டெல்லியில் கடுமையான மின் பற்றாக்குறை மற்றும் மின்தடை ஏற்பட்டுள்ளதால், பல்வேறு அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த வியாழனன்று, நகரின் உச்ச மின் தேவை அதிகபட்சமாக 7070 மெகாவாட்டாக இருந்தது மட்டுமின்றி, மே மாதத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்ததாக டெல்லி மின்சாரத் துறை தெரிவித்தது. மேலும், மே 1 முதல் டெல்லியின் உச்ச மின் தேவை 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், ஏப்ரல் 1 முதல் டெல்லியின் உச்ச மின் தேவை 58 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"டெல்லியின் மின் தேவை அலகு 2018ஆம் ஆண்டில் முதல் முறையாக 7,000 மெகாவாட்டைத் தாண்டியது, தொடர்ந்து 2019ஆம் ஆண்டில் வரலாற்றில் முதல் முறையாக 7409 மெகாவாட்டை தாண்டியது. 2020ஆம் ஆண்டில் 7,000 மெகாவாட்டைத் தாண்டவில்லை, 6314 மெகாவாட்டை எட்டியது ஆனால் 2021ஆம் ஆண்டில் நகரின் உச்ச மின் தேவை 7323 மெகாவாட்டாக இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு டெல்லியில் உச்ச மின் தேவை 8200 மெகாவாட்டை தாண்டும்
என எதிர்பார்க்கப்படுகிறது." என்று மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடுமையான வெப்ப அலைகளுக்குப் பிறகு, என்சிஆர் பகுதியின் சில பகுதிகளில் கனமழை பெய்ததால், நேற்று வெப்பநிலை சற்று தணிந்திருந்தது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நிலவும் சூறாவளி சுழற்சி காரணமாக இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Post a Comment