பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பல அலுவலக ரயில் சேவைகள் இரத்து செய்யப்படுவதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
அதேநேரம் இன்று காலை வேளையில் சில அலுவலக ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் பருவகால சீட்டைப் பயன்படுத்தும் ரயில் பயணிகள் அதனைப் பயன்படுத்தி அரச பேருந்துகளில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போக்குவரத்து சேவை அத்தியாவசியச் சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது சட்டவிரோதமானது எனப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இன்றைய தினம் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சேவைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment