பேலியகொட பொலிஸ் பிரிவிற்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தவறான தொழிலில் ஈடுபடும் இருபத்தைந்து பெண்களும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
பேலியகொட மீன் சந்தை, பட்டிய சந்தி, வெதமுல்ல உள்ளிட்ட பகுதிகளில் வைத்து பேலியகொட தலைமையக பொலிஸாரால் இந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பாவனைக்காக தவறான தொழிலில் ஈடுபடும் பெண்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் யுக்திய நடவடிக்கையுடன் பேலியகொட தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் என்.ஏ.களுவிதாரண உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த வாரம் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது இருபத்தைந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் வைத்திய பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இப்பெண்களிடம் எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளில் இருபத்தைந்து பெண்களும் கோனோரியா, ஹெர்பெஸ் போன்ற சமூக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்திய கண்காணிப்பின் கீழ் அவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Post a Comment