ஹென்றி கீசிங்கரும் வரலாற்றில் அவர் வகிபாகமும் சுவிசிலிருந்து சண் தவராஜா

 



அமெரிக்காவின் மேனாள் ராஜாங்க அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான ஹென்றி கீசிங்கர் தனது நூறாவது வயதில் மரணத்தைத் தழுவியுள்ளார். சிறந்த ராஜதந்திரியாகவும் சிறந்த அறிவாளியாகவும் முதலாளித்துவ பிரபுத்துவ சமூகத்தால் கொண்டாடாடப்படுகின்ற அதேவேளை மனிதாபிமானம் கொண்ட உலகின் பெரும்பான்மையான மக்களால் வெறுக்கப்படும் ஒரு போர்வெறியராகவும் அவர் விளங்கினார். 1969ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் 10 அரசுத் தலைவர்களின் ஆலோசகராகப் பணியாற்றிய பெருமை(?) கொண்ட கீசிங்கர் தனது வாழ்நாளில் அமெரிக்காவின் செல்நெறியைத் தீர்மானித்த ஒரு முக்கியமான நபராகப் பார்க்கப்படுகின்றார்.


இன்றைய உலகில் ஏகாதிபத்தியமாகக் கருதப்படும் ஒரு நாடு உண்டென்றால் அது அமெரிக்கா மாத்திரமே. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் பின்னால் நிலவிய உலக அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்க வல்லரசு இன்றுவரை தனது இடத்தை - சகல வழிகளையும் பயன்படுத்திக் கொண்டு - தக்கவைத்த வண்ணம் உள்ளது. இதன் பின்னணியில் செயல்பட்ட மூளைகளுள் ஒன்று கீசிங்கருடையது.
 

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததும் கொரியப் போர் வெடித்தது. இந்தப் போரில் அமெரிக்கா நேரடியாகப் பங்கு கொண்டிருந்த போதிலும் அதனால் தான் நினைத்த இலக்கை எட்டமுடியாமல் போய்விட்டது. அடுத்ததாக வியட்நாமில் அமெரிக்கத் தலையீடு நிகழ்ந்தது. வியட்நாம் போர் உலக வரலாற்றில் மறக்கப்பட முடியாதது. நேபாம் குண்டு உள்ளிட்ட போரில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் அனைத்தையும் அமெரிக்கா அஙகு பயன்படுத்தியது. வியட்நாம் போர் உச்சத்தில் இருந்தபோது 1969 முதல் 1975 வரையான காலப்பகுதியில் இராஜாங்கச் செயலாளராகப் பதவியில் இருந்தார் கீசிங்கர். தனது பதவியைப் பயன்படுத்தி அமெரிக்காவின் போர்க் குற்றங்கள் அனைத்தையும் நியாயப்படுத்தினார்.


அதே காலகட்டத்தில் வியட்நாமின் அயல் நாடுகளான லாவோஸ் மற்றும் கம்போடியா மீது சட்டவிரோதமான முறையில் அமெரிக்க விமானப் படைகள் நடத்திய குண்டுத் தாக்குதல்கள் வரலாற்றின் கறை படிந்த அத்தியாயங்கள். வியட்நாமிலும் அதன் அயல்நாடுகளிலும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 10 இலட்சம் வரையான மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கீசிங்கரின் காலத்திலேயே அமெரிக்காவின் கொல்லைப்புறம் என வர்ணிக்கப்படும் தென்னமெரிக்கப் பிராந்தியத்தில் பல சர்வாதிகாரிகள் ஆட்சியில் அமர்த்தப்பட்டார்கள். சிலியில் 1973இல் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு இதில் பிரதானமானது. ஜனநாயகத் தேர்தல் மூலம் ஆட்சியைப் பிடித்திருந்த சல்வடோர் அலன்டே இராணுவத்தின் துணையுடன் பலாத்காரமாக ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு அகஸ்ரோ பினாசே தலைமையிலான ஆட்சி அமைந்தது. இந்த நடவடிக்கையின் பின்னணியில் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. செயற்பட்டது என்பது ஒன்றும் இரகசியம் அல்ல. பினாசேயின் ஆட்சிக் காலத்தில் இடதுசாரிகள், மனித உரிமைக் காவலர்கள், பெண்ணுரிமைவாதிகள் என ஆயிரக் கணக்கானோர் வேட்டையாடப்பட்டனர். பினாசேயின் ஆட்சிக் காலகட்டம் சிலியின் மிகவும் கறைபடிந்த ஒரு காலகட்டமாகவே வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் கீசரிங்கரின் பாத்திரம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. இது தொடர்பில் அவர் மீது நீதிமன்ற வழக்கு ஒன்றைக் கூட சந்திக்க நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.





கீசிங்கர் குடியரசுக் கட்சியின் ஆதரவாளராக இருந்தார். இருந்தாலும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அரசுத் தலைவர்களும் அவரது ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்ளும் அளவுக்கு அவரது மூளை அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு, அதன் போர்வெறிக்குத் தேவையாக இருந்தது.
ஆனால் வரலாற்றின் ஒரு முரண்நகை சீனாவின் எழுச்சி. இன்றைய உலகில் அமெரிக்காவுக்கே சவால் விடும் அளவில் சகல துறைகளிலும் குறிப்பாக பொருளாதாரத்தில் போட்டிபோட்டு சீனா வளர்ச்சி கண்டமைக்கு ஒரு வகையில் ஹென்றி கீசிங்கரும் காரணமாக இருந்தார் என்பதே உண்மை. இன்றுவரை சீனாவில் பெரிதும் மதிக்கப்படும் அமெரிக்க இராஜதந்திரியாகவும் அவர் உள்ளார்.


மாவோ சே துங் தலைமையிலான மக்கள் சீனம் 1949இல் உருவானது. ஆனால் சீன அரசாங்கத்துடன் சிநேகபூர்வமான உறவுகளைப் பேண அமெரிக்கா தொடர்ந்தும் மறுத்து வந்தது. நட்பு நாடுகளாக விளங்கிய சோவியத் ஒன்றியத்தையும் மக்கள் சீனத்தையும் பிளவுபடுத்த சீனாவுக்கான அமெரிக்க அங்கீகாரத்தை கீசிங்கர் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தினார். சீன விடுதலைக்கு உதவிய சோவியத் ஒன்றியமும் சீனாவும் மஞ்சூரியப் பிராந்தியத்தில் சமர் புரியும் அளவுக்கு இந்த முரண்பாடு பெரிதாகியது.  
சீனாவுக்கான அமெரிக்க அங்கீகாரம் அந்த நாடு தொழில்துறையில் பாரிய வளர்ச்சியைக் காண உதவியது. கீசிங்கர் தீய நோக்கத்தோடு பனிப்போர்ச் சிந்தனையில் மேற்கொண்ட ஒரு காரியம் சீனாவுக்கு மிகப் பாரிய நன்மையாக முடிந்திருந்தது. அதனாலேயே இன்றளவும் அவர் சீனாவில் பெரிதும் மதிக்கப்படும் ஒருவராக உள்ளார்.





அரசாங்கங்களின் முகமாக அரசுத் தலைவர்களே விளங்கினாலும் கொள்கை வகுப்பாளர்களாகவும், அரசாங்கத்தின் செல்நெறியைத் தீர்மானிப்பவர்களாகவும் இராஜதந்திரிகளும் ஆலோசகர்களுமே பின்னணியில் செயல்படுவது வழக்கம். அவர்களின் பங்களிப்பு மறுக்கப்பட முடியாதது. அந்த வகையில் கடந்த பல பத்தாண்டுகளில் ஹென்றி கீசிங்கரின் பங்களிப்பு அமெரிக்காவைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானது. ஆனால் அவரின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் சாதாரண அமெரிக்கக் குடிமக்களுக்கோ, உலக மாந்தருக்கோ நன்மைகள் எதனையும் பெற்றுத் தரவில்லை, மாறாக போர்களுக்கும் அழிவுகளுக்கும் மாத்திரமே வழிவகுத்திருந்தன என்பதே அப்பட்டமான உண்மை.


சர்ச்சைக்குரிய அவருடைய வகிபாகம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறுவதில் அவருக்குப் பல தடங்கல்கள் இருந்தன. அவரது மறைவின் பின்னர் கூட பிரதான ஊடகங்களில் அவரின் மறைவு குறித்த செய்திகள் பெட்டிச் செய்திகளாகவே இடம்பிடித்திருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.
ஒருவர் எவ்வளவு திறமையானவர் என்பதை விட அந்தத் திறமை எதற்காக, யாருடைய நன்மைக்காகப் பயன்படுகிறது என்பதிலேயே வரலாற்றில் அவருக்கான இடம் கிடைக்கிறது என்பதை உணர கீசிங்கரின் வரலாறு ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.





2013இல் கீசிங்கரின் 90ஆவது பிறந்தநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அமெரிக்க அறிஞரான நொம் சொம்ஸ்கி தெரிவித்திருந்த கருத்து கீசிங்கரின் வரலாற்று வகிபாகத்தைத் தெளிவாக உணரப் போதுமானது. "(நாசி குற்றவாளகளுக்கு எதிராக) நூரம்பேர்க்கில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணைக்கு ஒப்பான ஒன்று இன்றைய காலகட்டத்தில் நடைபெறுமானால், ஒவ்வொரு அமெரிக்க அரசுத் தலைவரையும் தூக்கிலிட வேண்டிய நிலை உருவாகும். ஆனால், றிச்சட் நிக்சன் முதல் ஒவ்வொரு அமெரிக்க அரசுத் தலைவருக்கும் ஆலோசகராகச் செயற்பட்ட கீசிங்கரை 10 முறை தூக்கிலிட வேண்டியேற்படும்.


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்


www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial