காஸா - உருவாகுமா நிரந்தர சமாதானம்? சுவிசிலிருந்து சண் தவராஜா



இருண்ட சுரங்கத்தின் முடிவில் தெரியும் ஒளிக்கீற்று போன்று காஸா மோதல் தற்காலிகமாகவேனும் முடிவுக்கு வந்திருக்கிறது. 4 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மனிதாபிமான மோதல் தவிர்ப்பு மேலும் சில தினங்கள் நீடிக்கப்படுவதாகப் பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதைய சூழலில் இந்த மோதல் தவிர்ப்பு நீடிப்பதற்கான வாய்ப்பே அதிகம் தெரிகின்றதுஎனினும் இஸ்ரேலியத் தலைமை அமைச்சரின் அறிவிப்புகளைப் பார்க்கும் போது மோதல் மீண்டும் ஆரம்பமாகலாம் என்ற ஐயமும் எழுகின்றது.

ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடாத்திய தாக்குதலே மோதலின் தொடக்கப்புள்ளி என்றாலும், ஹமாஸை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டு காஸாப் பிராந்தியத்தைத் தனது ஆளுகைக்குள் அல்லது தான் விரும்பும் தலையாட்டிப் பொம்மைகளின் ஆளுகைக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற இஸ்ரேலின் விருப்பு திடீர் முடிவு அல்ல என்பது தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது. கைதிகள் பரிமாற்றம் என்ற அடிப்படையில் மோதல் தணிப்பு உடன்பாடு எட்டப்பட்டிருந்தாலும் பணயக் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட்ட பின்னர் ஹமாஸை நிர்மூலம் செய்யும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகும் என பெஞ்சமின் நெத்தன்யாஹூ அறிவிப்பு விடுத்துள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது.


ஹமாஸ் தீவிரவாதிகளைத் தண்டிப்பதாகப் பிரகடனம் செய்துகொண்டு காஸாவில் - பல்வேறு துயரங்களின் மத்தியில் வாழ்ந்த - பலஸ்தீன மக்களில் 15,000 பேர் வரை கொன்றொழித்தாகிவிட்டது. வடக்கு காஸா பிராந்தியத்தை தரைமட்டமாக ஆக்கிய பின்னரும் இன்னமும் தண்டனை வழங்கும் உத்வேகத்துடனேயே இஸ்ரேலிய அரசுத் தலைமை உள்ளது என்பது ஹமாஸ் மீதான வன்மம் மாத்திரமல்ல, ஒட்டுமொத்த பலஸ்தீன மக்களின் மீதான வன்மமுமே என்பதைப் புரிந்து கொள்ள பரந்த அரசியல் அறிவு எதுவும் தேவையில்லை.


ஆனால், இம்முறை இஸ்ரேல் எதிர்பார்த்த அளவில் பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவு அந்த நாட்டின் போர் முனைப்புக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. வழக்கமாக இஸ்ரேலின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் மேற்குலகம், தற்போதைய மோதல் விடயத்தில் பிளவுண்டு இருப்பதை நன்கு அவதானிக்க முடிகின்றது. 'பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிய கதை 'யைப் போல பலஸ்தீன விவகாரத்துக்கு இரண்டு தேசங்களின் தீர்வு என்ற விடயம் மீண்டும் உரத்துப் பேசப்படும் நிலையைக் காண முடிகின்றது.


பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் முதல் கனடியத் தலைமை அமைச்சர் யஸ்ரின் ட்ரூடோ வரை பொதுமக்கள் படுகொலைக்கு எதிரான குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் இந்தப் பட்டியலில் தொடர்ச்சியாக இணைந்து வருவதையும் பார்க்க முடிகின்றது.


மோதலுக்கு எதிரான குரல்கள் உலகின் பல நாடுகளில் இருந்து எழுந்தாலும், இஸ்ரேலுக்கு ஆதரவான மேற்குலகில் இருந்து வரும் குரல்களைப் புறந்தள்ளிவிடும் நிலையில் இஸ்ரேல் இல்லை என்பதே உண்மை. முழுமையாக இல்லாதுவிடினும் மேற்குலகில் இருந்து எழும் குரல்களை இஸ்ரேலால் முற்றாக நிராகரிக்க முடியாது.





மறுபுறம், அடுத்த வருடத்தில் அரசுத் தலைவர் தேர்தலை எதிர்கொண்டுள்ள ஜோ பைடன் நிர்வாகம் இஸ்ரேலுக்கான முழுமையான ஆதரவை வழங்குவதன் ஊடாக அரபு உலகில் இதுவரை சம்பாதித்த நண்பர்களை இழக்கும் அபாயம் உருவாகி இருக்கிறது. வழக்கமாக அமெரிக்காவின் ஆலோசனைகளை மதித்து நடக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் சில அமெரிக்கா தனது எதிரியாகக் கட்டமைத்துள்ள சீனாவின் பக்கம் சாய்வது இந்த விவகாரத்தில் அமெரிக்காவைக் கடுமையாகச் சிந்திக்க வைத்துள்ளது. இத்தகைய பின்னணியில் அமெரிக்கா வழங்கிய அழுத்தம் தற்போதைய மோதல் தவிர்ப்பு உடன்பாடு உருவாகக் காரணம் எனலாம்.


தற்போதைய மோதல் தவிர்ப்பு உடன்பாடு எட்டப்பட நேரடிக் காரணம் கட்டாரின் முன்முயற்சியே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும், அமெரிக்கா அழுத்தம் தராமல் இஸ்ரேல் தனது விடாப்பிடியான நிலையில் இருந்து இறங்கி வருவதற்கான வாய்ப்பு இருந்திருக்காது என்பது இயல்பாகவே ஊகிக்கக்கூடிய விடயம்.
ஒக்டோபர் 7இல் காஸா மோதல் ஆரம்பமான போது இஸ்ரேலியப் பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஹமாஸ் மீதான ஆத்திரம் பல தரப்புகளிலும் இருந்து வெளிப்பட்டது. இஸ்ரேலியத் தாக்குதலில் பலஸ்தீன மக்கள் ஆரம்பத்தில் கொல்லப்பட்ட வேளையிலும், பலஸ்தீன மக்களின் உயிரிழப்புக்கு ஹமாஸே காரணம் என்ற வசைபாடலையும் கேட்க முடிந்தது. ஆனால், தொடர்ந்து வந்த நாட்களில் இஸ்ரேல் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலும், ஆயிரக்கணக்கான பொதுமக்களின் படுகொலையும் பொதுவான அபிப்பிராயத்தை இஸ்ரேலுக்கு எதிராகத் திருப்பியது. அதன் விளைவே தற்போதைய மனிதாபிமான மோதல் தவிர்ப்பு உடன்பாடு.


தற்போது இரு தரப்பிலும் கைதிகள் விடுதலையாகிக் கொண்டு இருப்பதைப் பார்க்க முடிகின்றது. இஸ்ரேலியக் கைதிகள் அனைவரும் விடுதலையாகி விட்டால் அதற்குப் பிறகு ஹமாஸ் மீது தாக்குதல் நடத்த வேண்டிய தேவை என்ன உள்ளது என்ற கேள்வி இயல்பாகவே எழும். இந்தக் கேள்வி விடுதலையான கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர் மத்தியில் இருந்து எழுந்துள்ளதாகப் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து கைதிகள் விடுதலை செய்யப்பட இத்தகைய குரல்களின் ஒலி மேலும் ஓங்கும் என்பது புரிந்து கொள்ளப்படக்கூடியதே.


மறுபக்கம், ஹமாஸ் இயக்கத்தைப் பூண்டோடு அழிக்கப் போவதாகப் பிரகடனம் செய்துவிட்டு பெரும் பொருட்செலவில் நடத்தப்பட்ட விமானக் குண்டுவீச்சுகள், எறிகணை வீச்சுகள், தரைவழித் தாக்குதல்கள் என்பவற்றால் ஹமாஸ் இயக்கத்தின் முதுகெலும்பை உடைக்க முடியவில்லை என்பது தெள்ளத்தெளிவாகி விட்டது. அது மாத்திரமன்றி பலஸ்தீனக் கைதிகளின் விடுதலையை வென்றெடுத்ததன் ஊடாக ஹமாஸின் செல்வாக்கு பலஸ்தீன மக்கள் மத்தியில் மாத்திரமன்றி ஒட்டுமொத்த அரபு உலகிலும் அதிகரித்து உள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது.


தற்போதைய மோதலில் இராணுவ அடிப்படையில் யார் வெல்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பிராந்தியத்தில் சமாதானம் எட்டப்படுவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை. மாறாக, பலஸ்தீன மக்களின் தாயகக் கோரிக்கைக்கு நிரந்தரத் தீர்வொன்று எட்டப்படுவதன் ஊடாக மாத்திரமே சமாதானமும் அமைதியும் உருவாகும். போர் நிறுத்தத்துக்கும், மனிதாபிமான மோதல் தவிர்ப்பு நீடிப்புக்கும் குரல் தரும் அனைத்துத் தரப்புகளும் பலஸ்தீன விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்காகக் குரல் தர வேண்டிய மிகச் சரியான தருணம் இதுவே.





உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்


www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial