பரந்தூர் விமான நிலையம்: குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் போராட்டம்!
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைய உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்தப் பகுதியில் உள்ள 13 கிராம மக்கள் இன்று (டிசம்பர் 1) முதல் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளார்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
புதிய விமான நிலையத்துக்கு எதிராகவும், விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக புதிய விமான நிலைய அறிவிப்பு வந்த நாள் முதல் போராட்டம் நீடித்து வருகிறது. மேலும் இது தொடர்பாக கிராமசபை கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இந்த நிலையில் ஏகனாபுரத்தை மையமாக வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் பரந்தூர் உள்ளிட்ட 13 கிராம மக்கள் புதிய போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு நிலம் எடுக்க போடப்பட்ட அரசாணையைத் திரும்ப பெறும் வரை இன்று ( டிசம்பர் 1) முதல் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமல் காலவரையற்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஏகனாபுரம் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 111 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பள்ளிக்குச் செல்ல மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இதேபோல் விமான நிலையம் நில எடுப்பில் அதிகம் பாதிக்கப்படும் கிராமங்களான நாகப்பட்டு நெல்வாய், சேர்ந்தவர்களும் மேலேறி தங்களது கிராமத்தைச் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.
இதனால் பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Post a Comment