ஜப்பான் Review: ராஜுமுருகனின் கமர்ஷியல் பரிசோதனை கைகொடுத்ததா?

 

ஜப்பான் Review: ராஜுமுருகனின் கமர்ஷியல் பரிசோதனை கைகொடுத்ததா?

’குக்கூ’, ‘ஜோக்கர், ‘ஜிப்ஸ்’ ஆகிய படங்களின் மூலம் தனக்கென ஒரு பாதையில் சென்று கொண்டிருந்த இயக்குநர் ராஜுமுருகன், கார்த்தியுடன் கைகோத்து முதன்முறையாக கமர்ஷியல் பாதையில் அடியெடுத்துள்ள படம் ‘ஜப்பான்’. 2020-ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய நகைக் கொள்ளையில் தொடர்புடைய திருவாரூர் முருகனின் கதையை மையக்கருவாக எடுத்துக் கொண்ட ராஜுமுருகன், அதை படமாக்கியதில் வெற்றி பெற்றாரா என்பதை பார்க்கலாம்.

கோவையில் ஒரு பிரபலமான நகைக்கடையில் பெரிய துளை போட்டு கொள்ளையர்கள் சிலர் ரூ.200 கோடி மதிப்பிலான தங்கத்தை கொள்ளையடித்துச் செல்கின்றனர். உள்துறை அமைச்சரும் (கே.எஸ்.ரவிக்குமார் ) அந்தக் கடையின் பார்ட்னர் என்பதால் கொள்ளையனை வலை வீசி தேடுகின்றனர் போலீஸார். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை நகைகளை கொள்ளையடித்து திரைப்படம் எடுப்பது, மனம் போனபோக்கில் வாழ்வது என உல்லாசமாக இருக்கும் ஜப்பான் முனி (கார்த்தி) மீது போலீசாருக்கு சந்தேகம் வருகிறது. தன்னுடைய முன்னாள் காதலியான சஞ்சுவை (அனு இம்மானுவேல்) கடத்தி வைத்துக் கொண்டு போலீஸாரிடமிருந்து பல பகுதிகளுக்கு தப்பித்து ஓடுகிறார் ஜப்பான். உண்மையில் அந்தக் கொள்ளையை அடித்தது ஜப்பான்தானா? போலீசாரால் அவரை பிடிக்க முடிந்ததா என்பதே ‘ஜப்பான்’ சொல்லும் திரைக்கதை.

தமிழக போலீஸாருக்கு தலைசுற்ற வைத்த திருச்சி நகைக் கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகனின் கதையை எடுத்துக் கொண்டு, அதனை ஜனரஞ்சகமான முறையில் பல்வேறு மாற்றங்களுடன் திரைக்கதையாக்கி இருக்கிறார் ராஜுமுருகன். ஆனால், அந்தத் திரைக்கதை பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை தந்ததா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தொடக்கத்தில் வரும் கொள்ளைச் சம்பவம், அதனைத் தொடர்ந்த கார்த்தியின் ‘லாஜிக் இல்லா’ இன்ட்ரோ, அந்த லாஜிக் இல்லாத இன்ட்ரோவுக்கு வைக்கப்பட்ட ஒரு லாஜிக் என ’ஸ்மார்ட்’ ஆகவே தொடங்குகிறது படம். ஆனால், அதற்குப் பிறகு எந்தவொரு நோக்கமுமின்றி தேமே என்று காட்சிகள் நகர்கின்றன.

படத்தை பொறுத்தவரை பிரதான கதாபாத்திரமான ஜப்பான் ஒரு பலே திருடன். பல ஆண்டுகளாக போலீஸுக்கு தண்ணீர் காட்டி வருபவன். ஆனால், படத்தில் ஒரு இடத்தில் கூட அதற்கான காட்சி எதுவும் இல்லை. அப்படி என்ன செய்தார் என்று ஒட்டுமொத்த போலீஸும் இவரை துரத்திச் செல்கிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்யவில்லை. வெறும் வசனங்களாகவே வைக்கப்பட்டவை எல்லாம் பார்க்கும் நமக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒரு காட்சியில் இரண்டாம் உலகப் போரில் குண்டுகள் போட்டு அழித்தபின்பும் எழுந்த நின்ற ஜப்பானின் பெயரை தனது அம்மா தனக்கு வைத்ததாக சொல்வார் கார்த்தி. இந்த வசனத்துக்கு நியாயம் செய்யவாவது ஒரு காட்சியை இயக்குநர் வைத்திருக்கலாம்.

படத்தின் பாசிட்டிவ் என்றால், அது கார்த்தியின் நடிப்புதான். ஒட்டுமொத்த படத்தையும் ஒற்றை ஆளாக தனது அலட்சியமாக நடிப்பின் மூலம் சுமந்துள்ளார். அவர் இழுத்து இழுத்து பேசுவது ஆரம்பத்தில் துருத்திக் கொண்டு தெரிந்தாலும் போகப் போக ரசிக்க வைக்கிறது. படம் முழுக்க கார்த்தி அடிக்கும் ஒன்லைன் கவுன்ட்டர்கள் அப்ளாஸ் ரகம். இவருக்கு அடுத்தபடியாக படத்தில் ரசிக்க வைப்பவர், கார்த்தியுடன் வரும் வாகை சந்திரசேகர். ஆக்‌ஷன் காட்சிகளும் அவர் சொல்லும் பைபிள் வசனங்கள், ஒன்லைனர்கள் நகைச்சுவைக்கு உதவுகின்றன. போலீஸ் அதிகாரிகளாக வரும் சுனில், விஜய் மில்டன் சினிமா மேனேஜராக வரும் பவா செல்லதுரை, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர். நாயகியாக வரும் அனு இம்மானுவேலுக்கு படத்தில் என்ன வேலை என்று யாராவது கேட்டுச் சொன்னால் நலம்.

மிகவும் சீரியசாக தொடங்கும் படம், கார்த்தியின் அறிமுகத்துக்குப் பிறகு ஸ்பூஃப் பாதையில் பயணிப்பதா அல்லது ஆக்‌ஷன் பாதையில் பயணிப்பதா என்று தெரியாமல் தடுமாறுகிறது. உண்மையான கொள்ளையனான திரூவாரூர் முருகன் தான் ‘மனி ஹெய்ஸ்ட்’ தொடரை பார்த்தே கொள்ளையில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்திருந்தார். ‘மனி ஹெய்ஸ்ட்’ பாணியில் படத்தில் ஒன்றிரெண்டு புத்திசாலித்தனமான கொள்ளை காட்சிகள் இருந்திருந்தாலாவது படம் தப்பித்திருக்கும். ஆனால் தொடக்கம் முதல் க்ளைமாக்ஸுக்கு முன்பு வரை திரைக்கதை எந்தவித ஏற்ற இறக்கங்களும் இன்றி தட்டையாகவே செல்வது ஏமாற்றம்.

படத்தில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும் ஒரே காட்சி க்ளைமாக்ஸ் மட்டுமே. கார்த்தி சொல்லும் அந்த சிறிய ப்ளாஷ்பேக்கும், அதன் இறுதியில் கார்த்தியின் தேர்ந்த நடிப்பும் உணர்வபூர்வமாக எழுதப்பட்டுள்ளது. அக்மார்க் ராஜுமுருகனின் சினிமா பாணி. அந்த ஒரு காட்சியில் இருந்த நேர்த்தி படம் முழுக்க இல்லாமல் போனது சோகம். இதனால் நம்மால் அந்த ஒரு காட்சியிலும் ஒன்றமுடியாமல் போகிறது.

படத்தின் மற்றொரு ப்ளஸ் அதன் வசனங்கள். சமகால அரசியல், சினிமா, சமூக வலைதள வதந்திகள், இளைய தலைமுறையின் ரசனைகள் குறித்து வசனங்கள் அனைத்தும் பட்டாசாக இருக்கின்றன. "ஓட்டு போடும் போது லாஜிக் பார்க்கமாட்டீங்க... ஓட்டை போடும் போது லாஜிக் பார்க்குறீங்களா?" போன்ற ஷார்ப்பான ஒன்லனர்கள் படம் முழுக்க ஆங்காங்கே தூவப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப்போனால் இந்த வசனங்கள்தான் படத்தை நகர்த்தவே உதவியிருக்கின்றன. ரவி வர்மனின் ஒளிப்பதிவு கச்சிதம். ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் ஈர்க்கவில்லை.

ராஜுமுருகனின் முந்தைய படங்களான ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகியவற்றின் பிரதான கதாபாத்திரங்களுக்கு ஒரு ஆழமான மற்றும் உணர்வுபூர்வமான பின்னணி சொல்லப்பட்டிருக்கும். அது ‘ஜப்பானில்’ முற்றிலுமாக மிஸ்ஸிங். கமர்ஷியல் பரிசோதனையின் களமிறங்கிய ராஜுமுருகன், படத்தின் க்ளைமாக்ஸில் கொடுத்த உழைப்பை ஒட்டுமொத்த படத்திலும் கொடுத்திருந்தால் அவரை நாமும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியிருக்கலாம்.

views
Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial