மன்சூர் அலி கான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல் என்று இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்துப் பேசியவை பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. திரைத்துறையிலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினர்களிடம் இருந்தும் மன்சூர் அலிகானிற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், "மன்சூர் அலி கான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல்" என்று தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும், இயக்குநருமான பாரதிராஜா தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "சினிமா துறையில் சக கலைஞர்களை மதிப்பது மிகவும் அவசியம். பெண்கள் சுயமாக வெளியுலகம் வரவும், சுய உழைப்பில் உயரவும் போராடும் காலம் இது. அப்படிப்பட்ட நேரத்தில் பெண்களைப் பற்றி யார் இழிவாகப் பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது.
அதுவும் சினிமாவில் பெண்கள் என்றாலே ஒரு இளக்காரப் பார்வை பலரிடம் இருக்கிறது. ஆனால் பொதுவெளியை விட சினிமா இன்று பெண்களுக்கு நன்மதிப்பையும், உயர்ந்த நிலையையும், சமமாக அவர்களை மதிக்கும் நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இக்காலகட்டங்களில் நம்மைச் சுற்றிப் போராடி வெல்லும் பெண்களுக்கு உறுதுணையாக, தூணாக நின்று வாழ்த்த வேண்டியது நம் அனைவரின் கடமை. சில மேடைகள், சில பேட்டிகள், சில நேரங்கள், சில மனிதர்களின் சிந்தனையை நாவைப் புரட்டிப்போடும்.
நா கவனமும், மேடை நாகரிகமும் அனைத்து இடங்களிலும் மிக முக்கியமானவை. நடிகர் மன்சூர் அலிகான் தனது பேட்டியில் நிதானித்திருக்க வேண்டும். விடும் வார்த்தைகள் மற்றவர்களை வலிக்கச் செய்யுமே என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வரம்பு மீறி நாம் மதிக்கும் ஒரு சக நடிகை பற்றிப் பேசியிருக்கிறார். இன்றைய திரையுலகை வேறு தளத்திற்குக் கொண்டு செல்லும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது. சகக் கலைஞர்களைப் பற்றிப் பேசும்போது பொறுப்புணர்ந்து பேச வேண்டும்.
அவ்வாறு பொறுப்புணராமல், தடித்த வார்த்தைகளைப் பேசியதற்கு, நமது சங்கம் சார்பில் என் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தவிர, 'அவர் பேசியது தவறு. எனது நன்நிலையை அவ்வார்த்தைகள் பாதிக்கின்றன' என்று பாதிக்கப்பட்ட பெண் குரல் எழுப்பியுள்ள நிலையில், தானாக முன்வந்து மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்காதது சரியற்ற, முறையற்ற செயல்.