புலிவாலைப் பிடித்த கதை சுவிசிலிருந்து சண் தவராஜா


பெரும் ஆரவாரத்துடன் உக்ரைனால் முன்னெடுக்கப்பட்ட ரஸ்யப் படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் எதிர்பார்த்த வெற்றி எதனையும் பதிவு செய்திராத நிலையில், உக்ரைனுக்கு அனைத்து வழிகளிலும் உதவிவரும் மேற்குலகம் தனது படைகளை நேரடியாகக் களமிறக்குவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அது மாத்திரமன்றி, உக்ரைன் படைகளுக்கு ஆதரவாக அணுகுண்டுத் தாக்குதல்களை நடத்தும் உத்தேசம் உள்ளதாகவும் மேற்குலகிடம் இருந்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி தருவதாக உள்ளன.


ஒரு வருடத்தையும் கடந்தும் நடைபெற்றுவரும் மோதலில் குறிப்பிடத்தக்க வெற்றியை மாத்திரமே ரஸ்யா பதிவு செய்துள்ள நிலையில், ரஸ்யா தன்னிடம் உள்ள அணுகுண்டுகளைப் பாவித்து களத்தைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற குரல்கள் ரஸ்ய ஆதரவு சக்திகளிடம் இருந்து வெளியாகி உள்ளன. அவ்வாறு அணுகுண்டுகளைப் பாவிக்கும் உத்தேசம் தம்மிடம் இல்லை என ரஸ்யத் தரப்பில் இருந்து கருத்துகள் வெளியிடப்பட்டுள்ள போதிலும், பெலாரஸ் நாட்டுக்கு அணுகுண்டுகள் சிலவற்றை ரஸ்யா அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


உக்ரைன் மோதல்கள் ஆரம்பித்த நாள் முதலாக, மூன்றாம் உலகப் போர் அபாயம் தொடர்பில் பல்வேறு தரப்புகளில் இருந்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து வருகின்றன. தற்போது வெளிவரும் செய்திகள் உண்மையிலேயே அதுபோன்ற ஒரு போர் உருவாகி விடுமோ என்ற அச்சத்தையும் அதன் விளைவு என்னாகுமோ என்ற பீதியையும் உருவாக்கி உள்ளன.


'ரஸ்யாவை எப்பாடு பட்டாவது பலவீனப்படுத்தி விடுவது, முடிந்தால் அந்த நாட்டைப் பல துண்டுகளாகப் பிளவுபடுத்தி விடுவது, அந்நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்து விளாடிமிர் புட்டின் அவர்களை அகற்றி விடுவது' உள்ளிட்ட மறைமுகக் காரணங்களோடுதான் உக்ரைனுக்கான மேற்குலகின் ஆதரவு தொடர்கிறது. ஆனால் கள நிலவரத்தைப் பொறுத்தவரை தற்போதைய நிலையில் மேற்குலகின் எதிர்பார்ப்புகளுள் ஒன்று கூட நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. இதன் விளைவாக மேற்குலகம் பொறுமை இழந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.


'உலகில் தான் வைத்ததே சட்டம், தனது சொல்லுக்குக் கட்டுப்படாதவர்கள் நிம்மதியாக வாழ முடியாது' என்னும் அமெரிக்க வல்லாதிக்கக் கனவு ரஸ்ய விடயத்தில் படிப்படியாகத் தகர்ந்து வருவதைப் பார்க்க முடிகின்றது. அது மாத்திரமன்றி, உலக அரங்கில் ரஸ்யாவுக்கான ஆதரவு படிப்படியாக அதிகரித்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.


மேற்குலகின் அதீத பிரசாரத்துடன் முன்னெடுக்கப்பட்ட உக்ரைனின் பதில் படை நடவடிக்கையில் 50,000க்கும் மேற்பட்ட விசேட பயிற்சி பெற்ற படையினர் பங்கு கொண்டிருந்தனர். யூன் 4ஆம் திகதி ஆரம்பமான இந்த நடவடிக்கையில் உக்ரைன் பலத்த படை இழப்பைச் சந்தித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த மூன்று வாரப் படை நடவடிக்கையில் உக்ரைன் தரப்பு சற்றொப்ப 30 வீதப் படை இழப்பைச் சந்தித்துள்ளதாக ரஸ்ய அதிபர் புட்டின் தெரிவித்துள்ளார். படை இழப்பு இத்தகைய வேகத்தில் சென்றால் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு மாத்திரமே உக்ரைன் படையினரால் தாக்குப்பிடிக்க முடியும் என எதிர்வு கூறப்படுகின்றது.


தமது தரப்புப் படையினரின் இழப்பு பற்றிய விபரங்கள் எதனையும் வழங்காத போதிலும், படை நடவடிக்கைகள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். பி.பி.சி. செய்திச் சேவைக்கு அவர் வழங்கிய செய்தியில் தெரிவிக்கப்பட்ட கருத்து கள நிலவரத்தைத் தெளிவாகப் புலப்படுத்துவதாக உள்ளது.


கள நிலவரம் எதுவாக இருந்தாலும், உக்ரைன் படையினர் தொடர்ந்தும் அதிகளவில் பலியாவதைத் தடுக்கும் எண்ணம் எதுவும் மேற்குலகிடம் இல்லை என்பது துல்லியமாகத் தெரிகின்றது. பல மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை உக்ரைனுக்கு வாரி வழங்கிய பின்னரும் கள நிலவரம் சாதகமாக அமையவில்லை, அமைய வாய்ப்பில்லை என்பது நன்கு தெரிந்தும் மென்மேலும் ஆயுத தளபாடங்களை வழங்குவதிலேயே மேற்குலகம் முனைப்புக் காட்டி வருகின்றது. இறுதியாக, ரஸ்யா விதைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான விசேட இயந்திரங்களை வழங்க இருப்பதாக நேட்டோ செயலாளர் நாயகம் யென்ஸ் ஸ்ரொல்ரன்பேர்க் தெரிவித்துள்ளார். யேர்மனியின் 'வேல்ற்' பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியில், "ஆயுத மோதலை நிறுத்தி, ரஸ்யாவின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் சமாதானத்துக்கு வாய்ப்பே இல்லை" எனக் கூறியுள்ளார்.


ஸ்ரொல்ரன்பேர்க்கின் கருத்துகளுக்குப் பதிலளித்துள்ள ரஸ்ய வெளியுறவு அமைச்சர் சேர்கே லவ்ரவ், "நேட்டோ, ஸ்ரொல்ரன்பேர்க்கின் கூற்றின் ஊடாக உக்ரைன் விவகாரத்தில் மோதல் நிறுத்தத்துக்கு வாய்ப்பே இல்லை எனத் தெரிவிப்பதன் மூலம் மீண்டும் ஒருமுறை போரே தீர்வு எனக் கூறி நிற்கிறது. எதுவாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ளக் கூடிய தயார் நிலையிலேயே ரஸ்யா இருக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் நேட்டோவின் இலக்கு என்ன என்பதை நாம் பன்னெடுங் காலமாகவே தெரிந்து வைத்திருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.


தற்போதைய நிலையில், உக்ரைனுக்கு ஒரு படைத்துறை வெற்றியைப் பெற்றுத் தர வேண்டுமாக இருந்தால் நேட்டோவிடம் மூன்று தெரிவுகளே உள்ளன.
லிபியாவில் செய்ததைப் போன்று உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறப்பதைத் தடை செய்யலாம். இதன் மூலம் ரஸ்ய விமானங்கள், ஆளில்லா விமானங்கள் என்பவை தாக்குதல் நடத்துவதைத் தடுக்க முடியும், ஆனால் இவ்வாறு செய்வதாயின் நேட்டோ தனது விமானங்களைப் பயன்படத்த வேண்டியேற்படும். அது ரஸ்யாவுடனான நேரடி மோதலுக்கே வித்திடும்.
அடுத்ததாக, நேட்டோ தனது படைகளை உக்ரைனுக்கு ஆதரவாகக் களமிறக்க வேண்டும். அல்லது அணுகுண்டுகளைப் பாவிக்க வேண்டும்.



விடாக் கண்டன், கொடாக் கண்டன் பாணியில் தொடரும் இந்த மோதலில் பாதிப்பு என்னவோ இரு நாட்டு மக்களுக்கும்தான். மோதல் நீடிக்கும் வரை அத்தகைய பாதிப்பு தொடரவே செய்யும். போரில் அதீத பாதிப்புகளைச் சந்தித்துள்ள நாடான உக்ரைன் போரை நிறுத்த விரும்பினாலும், போரைத் தூண்டும், போருக்குத் தூபம் போடும், போருக்கு நிதி வழங்கும் தரப்புகள் போரை நிறுத்திக் கொள்ள அனுமதிக்கப் போவதில்லை என்பதே யதார்த்தம். புலி வாலைத் தொட்டவனால் வாலை விடவும் முடியாது, தொடர்ந்து கையில் பிடித்துக் கொண்டிருக்கவும் முடியாது. எதனைச் செய்தாலும் ஆபத்து வந்தே தீரும். உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியின் நிலையும் அதுவே.

 

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial