10 தேசிய விருதுகளைத் தட்டிய தமிழ் சினிமா - ‘சூரரைப் போற்று’ வென்ற 5 பிரிவுகளின் சிறப்புகள்
'சூரரைப் போற்று' தமிழ் திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை), சிறந்த திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றுள்ளது. இது 68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியலில் (2020-ம் ஆண்டுக்கான விருதுகள்) அறிவிக்கப்பட்டுள்ளது. 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' மூன்று விருதுகள், 'மண்டேலா இரண்டு விருதுகள்' என மொத்தம் 10 தேசிய விருதுகளை வசப்படுத்தியிருக்கிறது தமிழ் சினிமா.
கடந்த 2020 நவம்பரில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் 'சூரரைப் போற்று' வெளியாகி இருந்தது. 2டி எண்டர்டெயின்மெண்ட் பேனரில் ‘சூர்யா - ஜோதிகா’ தம்பதியர் இந்த படத்தை தயாரித்திருந்தனர். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கி இருந்தார். சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, மோகன் பாபு, கருணாஸ், பூ ராமு, காளி வெங்கட் என பலரும் இதில் நடித்திருந்தனர்.
'சூரரைப் போற்று' திரைப்படம் ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியில் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. திரைப்பட விமர்சகர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பிலும் இந்தப் படம் வரவேற்பை பெற்றது. இப்போது இந்தப் படம் இந்தி மொழியில் உருவாகி வருகிறது.
இந்தச் சூழலில்தான் ஐந்து விருதுகளை வென்றுள்ளது இந்தத் திரைப்படம். படக்குழுவினருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உலக சினிமா விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நடிகர்: இந்தப் படத்தில் லீட் ரோலில் நெடுமாறன் ராஜாங்கம் (மாறா) கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திய சூர்யா சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான சூர்யா இந்தப் படத்திற்காக நிறைய ஹோம் ஒர்க் செய்திருந்தார். கேப்டன் கோபிநாத் கேரக்டரில் அவர் தன்னை இரண்டறக் இணைத்துக் கொண்டார். இந்தப் படத்தில் அவர் நடித்தார் என சொல்வதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்திருந்தார். படம் வெளியான போதே அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என சொல்லப்பட்டது. இப்போது அது நிஜமாகி உள்ளது. வெற்றிக்காக மாறாவாக சூர்யா இந்த படத்தில் போராடி இருப்பார்.
சிறந்த நடிகை: சூரரைப் போற்று திரைப்படத்தில் ‘பொம்மி’ கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பிய நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார். சூரரைப் போற்று, தமிழில் அவர் நடித்த மூன்றாவது திரைப்படம்.
கேப்டன் கோபிநாத்தின் மனைவி பார்கவி கதாபாத்திரத்தில் அபர்ணா நடித்திருந்தார். நிஜ வாழ்வில் பார்க்கவி பேக்கரி கடை நடத்தி வருகிறார். திரைப்படத்திலும் இந்த காட்சிகள் வரும். அபர்ணாவின் அசலான நடிப்பை படம் வெளியானபோதே பாராட்டியிருந்தார் கேப்டன் கோபிநாத்.
காதல் தொடங்கி அத்தனை உணர்வுகளையும் தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருப்பார் அபர்ணா. முக்கியமாக அவர் பேசும் வசனங்கள் பரவலான மக்களின் கவனத்தை ஈர்த்தது. இப்போது அதுவே அவருக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்துள்ளது.
சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை): இந்தப் படத்திற்கு பின்னணி இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ராணுவ பயிற்சி, விமான நிலைய காட்சி, தந்தையின் மரணம் என பல்வேறு காட்சிகளுக்கு தன் பின்னணி இசை மூலமாக உயிர் கொடுத்திருப்பார் ஜி.வி. அதனை இந்த படத்திற்காக ஜி.வி சேர்த்த ஜீவன் எனவும் சொல்லலாம்.
சிறந்த திரைக்கதை: இந்த படத்தின் திரைக்கதையை இயக்குநர் சுதா கொங்காரா மற்றும் ஷாலினி உஷா நாயர் ஆகியோர் இணைந்து எழுதி இருந்தனர். படத்தின் கதை கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை கதையின் தழுவல் என்றாலும் திரைக்கதை அமைப்பில் இருவரும் அசத்தி இருப்பார்கள். அது தான் இந்த படத்தின் வெற்றிக்கு ஆணிவேர். இப்போது தேசிய விருதையும் வென்றுள்ளனர்.
Post a Comment