அதிமுக தலைவர்கள் பேனர்கள் கிழிப்பு : வானகரத்தில் பதற்றம்!
அதிமுக பொதுக்குழுவை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவுக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், பொதுக்குழுவுக்குத் தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் வாதங்கள் முன் வைக்கப்பட்டு சற்று நேரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.
இதனிடையே வானகரத்தில் பொதுக்குழு நடைபெறவுள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழு நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரது பேனர்கள் வைக்கப்பட்டன.
பொதுக்குழு நடைபெறும் இடத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், மூர்த்தி, உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். கார் பார்க்கிங் பகுதி உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டனர்.
இன்று மாலை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பொதுக்குழு நடைபெறும் இடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளக் கூடாது என்று கோஷமிட்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார், பேச்சுவார்த்தை நடத்திக் கலையச் செய்தனர்.
இந்தச்சூழலில் பொதுக்குழு நடைபெறும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் என அனைத்து தலைவர்களின் பேனர்களும் கிழிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வந்து சென்ற பிறகுதான் பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனால் வானகரம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment