முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாட்டை விட்டு தப்பிச் செல்லும் எண்ணம் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
AFP சர்வதேச செய்தி சேவைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் காலி முகத்திடலில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரச ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலையடுத்து, பதற்றமான சூழல் ஏற்பட்டதன் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்தார்.
இரவிலும் போராட்டங்கள் தீவிரமடைந்ததுடன், முன்னாள் பிரதமர் தங்கியிருந்த அலரிமாளிகையை போராட்டக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர்.
கொழும்பில் உள்ள அலரிமாளிகையில் இரவு அமைதியின்மை ஏற்பட்டதைத் தொடர்ந்து பலத்த இராணுவப் பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் பிரதமர் அங்கிருந்து அகற்றப்பட்டார்.
அவரும் அவரது குடும்பத்தினரும் இன்று காலை திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
76 வயதான மஹிந்த ராஜபக்ஷ, தனது ஐந்து தசாப்த கால அரசியல் வாழ்க்கையில் மிக மோசமான நெருக்கடியில் தற்போது உள்ளார்.
இந்நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவருடைய மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ராஜபக்ச குடும்பம் நாட்டை விட்டு வெளியேறுவதாக வதந்திகள் பரவியபோதிலும், அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என ஏ.எஃப்.பியிடம் அவர் தெரிவித்தார்.
“நாங்கள் வெளியேறப் போகிறோம் என்று அநேக வதந்திகள் உள்ளன, நாங்கள் ஒரு போதும் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்” என்று அவர் கூறினார்.
தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட நாமல் , எனது தந்தை நாடாளுமன்றத்தில் இருந்து விலகுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அவர் பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பாக இருக்கிறார், அவர் எமது குடும்பத்தினருடன் தொடர்ந்தும் தொடர்பில் இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக ராஜபக்ஷ குடும்பம் இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்திற்கு எதிராக பல வாரங்களாக நடைபெற்ற மாபெரும் அமைதியான போராட்டங்கள் திங்களன்று வன்முறையாக வடிவெடுத்தது. ஆதரவாளர்கள் கிராமப்புறங்களில் இருந்து தலைநகரை நோக்கி வருகைதந்து அரசாங்க ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பாளர்களைத் தாக்கினர்.
இந்த வன்முறை அலை நகரத்திலிருந்து கிராமத்திற்கு பரவியதையடுத்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வீடுகள் தீயிட்டு அழிக்கப்பட்டன.
இது குறித்து கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, எதிர்ப்பு தெரிவிக்கும் இலங்கையர்களின் உரிமையை தானும் தனது குடும்பத்தினரும் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டதாகவும், இந்த நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கையை ராஜபக்ஷக்கள் ஒருபோதும் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
Post a Comment